தொடக்க காலப் பின்னணி
Early History
தமிழகத்தின் பல இடங்களில் பல மாவட்டங்களில் தனிப்பட்ட பதிப்பகங்களின் சார்பில் புத்தகக் காட்சி நடைபெற்று வந்தது.
சென்னையில் பொது நூலகத் துறையின் சார்பாக நூலக வார விழா என்ற நிகழ்வு நவம்பர் மாதங்களில் நடைபெற்று வந்தது. அந்த விழாவில் புத்தகக் காட்சி ஒரு வாரம் நடைபெற்று வந்தது. அப்படி நடைபெற்ற புத்தகக் காட்சிகளில் குறிப்பிட்ட குறைவான பதிப்பாளர்களே கலந்து கொண்டனர். இதற்கான மக்களின் ஆதரவும் குறைவாகவே இருந்தது.
“இந்த நிலையில் 1977 ஆம் ஆண்டு பி ஐ பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்தில் பணியில் இருந்த திரு கே.வி. மேத்யூ என்பவர் பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களிடம் தொடர்பு கொண்டு தனியாக புத்தகக் காட்சியை நடத்துவது என்று முடிவு செய்தார்.”
அவர் பள்ளிகள் கல்லூரிகளை இணைத்து தனியாக சென்னை மதரசா இ ஆசாம் பள்ளியில் 1977 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மெட்ராஸ் புக் ஃபேர் (MADRAS BOOK FAIR) என்ற தலைப்பிட்டு புத்தகக் காட்சி நடத்தினார்.
ஆரம்ப கட்டமும் விழிப்புணர்வு ஊர்வலமும்
The Early Years and the Awareness Procession
முதல் புத்தகக் காட்சியில் சுமார் 13 நிறுவனங்கள் மட்டுமே கலந்து கொண்டன. இரண்டாம் ஆண்டில் சுமார் 20க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டன. இரண்டு ஆண்டுகள் மதரச இ ஆசாம் பள்ளியில் நடைபெற்ற புத்தகக் காட்சி மூன்றாம் ஆண்டில் மவுண்ட் ரோடில் உள்ள காயிதே மில்லத் கல்லூரிக்கு மாற்றம் செய்யப்பட்டது.
MOUNT ROAD PROCESSION • 1980s
முதல் ஏழு எட்டு ஆண்டுகளில் புத்தகக் காட்சியை விளம்பரப்படுத்துவதற்காக பள்ளிக் குழந்தைகள் ஒருங்கிணைத்து, நூல்களில் இடம்பெறும் கார்ட்டூன் கதாபாத்திரங்களைப் போன்று குழந்தைள் வேடமேற்று சென்னை மவுண்ட் ரோடு பிரதான சாலையில் ஊர்வலம் நடத்தப்பட்டது. இந்த நிகழ்வில் சேர்ந்திசையில் வல்லமை பெற்ற எம்பி சீனிவாசன் அவர்களால் பாடல்கள் உருவாக்கப்பட்டு குழந்தைகளால் பாடப்பட்டது. சென்னை மக்களை திரும்பிப் பார்க்க வைத்த நிகழ்வாக அக்காலத்தில் இது பேசப்பட்டது.
சங்கமாக உருவெடுத்த வரலாறு
The Formation of the Association
ஆரம்பத்தில் குறிப்பிட்ட ஒரு பத்து பதிப்பாளர்களால் சேர்ந்து நடத்தப்பட்ட சென்னை புத்தகக் காட்சி பத்து ஆண்டுகளில் சங்கமாக உருவெடுத்தது.
அப்படி உருவான சங்கம் தான் ‘தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம்’ (BAPASI).
Booksellers and Publishers Association of South India (BAPASI) — தென்னிந்திய பதிப்புலகின் அதிகாரப்பூர்வ தாய் அமைப்பு.
ஆரம்ப கட்டத்தில் டிசம்பர் மாதங்களின் நடைபெற்று வந்த சென்னை புத்தகக் காட்சி பின்னாளில் ஜனவரி மாதத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது.
புத்தகக் காட்சியின் வளர்ச்சி & இட மாற்றங்கள்
Growth of the Book Fair & Venue Changes
முதல் ஆண்டும் இரண்டாம் ஆண்டும் பள்ளியின் ஒரு அரங்கினுள் நடைபெற்ற புத்தகக் காட்சி மூன்றாம் ஆண்டில் காயிதே மில்லத் பெண்கள் கல்லூரியின் உள்ளே உள்ள மிகப் பெரிய மைதானத்தில் கீற்றுக் கொட்டகைகள் அமைத்து அதிலே அரங்கம் அமைத்து புத்தகக் காட்சி நடைபெற்றது. மைதானத்தின் இருபுறமும் புத்தக அரங்குகள் வரிசை கட்டி நிற்கும். நடுவிலே பரந்து விரிந்த வானம் வெளிச்சம் போட்டுக் கொண்டிருக்கும்.
HISTORIC CAMPUS • 1980s
முதல் பத்தாண்டுகளுக்கு பிறகு புத்தகக் காட்சி மிகப் பெரிய வேகம் எடுத்துச் செல்லத் தொடங்கியது.
பபாசியில் பலரும் தலைவராக செயலாளராக பணியாற்றிய காலகட்டங்களில் சென்னை புத்தகக் காட்சி பல முன்னேற்றங்களை காண ஆரம்பித்தது.
காயிதே மில்லத் கல்லூரியில் நடைபெற்ற புத்தகக் காட்சியில் நடக்கின்ற பாதையில் புழுதி பறப்பதை தடுப்பதற்காக முதன்முதலாக நடைபாதையில் விரிப்புகள் விரிக்கப்பட்டன. பின்னர் நடைபாதைகள் கீற்றுகள் கொண்டு மூடப்பட்டன இதனால் வெயில் மழை தவிர்க்கப்பட்டது.
விரிவாக்கமும் பூந்தமல்லி, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானமும்
Expansion: Poonamallee, St. George's Grounds & Nandanam YMCA
காயிதே மில்லத் கல்லூரியில் மிகச் சிறப்பாக நடைபெற்று வந்த சென்னை புத்தகக் காட்சிக்கு வாசகர்களின் வருகை மிக அதிகமாகியது. இந்நிலையில் பங்கேற்பாளர்களுக்கான அரங்கங்களுக்கும் அதிக தேவை ஏற்பட்டது. அதற்கான வாய்ப்பு காயிதே மில்லத் கல்லூரியில் இல்லை.
இந்தச் சூழலில் ஒரு 200 முதல் 250 அரங்குகள் கொண்ட புத்தகக் காட்சி நடைபெற்று வந்த நிலையில் சென்னையின் இதய பகுதியான அண்ணா சாலையில் இருந்து பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலம் இந்திய பள்ளியில் உள்ள மிகப்பெரிய மைதானத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட அரங்குகளுடன் புத்தகக் காட்சி அமைக்கப்பட்டது.
25 ஆண்டுகளுக்கு மேலாக சென்னையின் மையப்பகுதியான அண்ணா சாலையில் நடைபெற்று வந்த புத்தகக் காட்சி பூந்தமல்லி நெடுஞ்சாலைக்கு மாற்றம் செய்யப்பட்டு மிகப்பெரிய வெற்றியைக் கண்டது.
இதற்குப் பிறகுதான் சென்னை மக்களால் மட்டுமே அறியப்பட்ட சென்னை புத்தகக் காட்சி மிகப் பெரிய அளவில் விரிவடைந்து தமிழகம் முழுவதும் பிரபலமாகியது.
வாசகர்களின் வருகையும் ஊடகங்களின் ஆதரவும் சென்னை புத்தகக் காட்சியை இந்திய அளவிலும் உலக அளவில் பிரபலப்படுத்தியது.
இப்படிப்பட்ட புகழின் காரணமாக பங்கேற்பாளர்களின் வருகை மிக அதிகமாகியது. 500 முதல் 600 அரங்குகள் என்ற நிலையில் இருந்து 1000 அரங்குகளுக்கான தேவை ஏற்பட்டது.
இந்த தேவையை பூர்த்தி செய்வதற்காகவே நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானம் தேர்வு செய்யப்பட்டது.
“இன்று உலகில் உள்ள தமிழர்கள் அனைவரும் தமிழர் திருநாளை புத்தகக் காட்சியுடன் கொண்டாடும் நிலைக்கு இந்த புத்தகக் காட்சி உயர்ந்திருக்கிறது.”